
இந்த ஆண்டு நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேட பூஜைகள் அமைதியாக இடம்பெற்றன.
இம்முறை ஆலயத்தில் மாலை ஆறு மணிவரை மாத்திரமே பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆலய பகுதியில் காலை முதல் நெடுங்கேணி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிபாடுகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின பூஜைகளை செய்யமுற்பட்ட போது நெடுங்கேணி பொலிஸாரால் அடாவடியான முறையில் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு அடாவடிதனம் ஏதும் இன்றி அமைதியான முறையில் சிவராத்திரி தின பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் 6 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி விழா இடம்பெற்றமையை ‘சிவன்பகல்’ என்றே கூற வேண்டும், இங்கே அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது என சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் குற்றஞ்சாட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
வழிபாட்டின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.