இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார்.
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 48ஆவது வயதில் நேற்று (25) அவர் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது அவரது உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் .
தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, அதன் பிறகு சமுத்திரன், பல்லவன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இருப்பினும், அவரது நடிப்பிற்குப் பெரிதளவில் வரவேற்பு கிடைக்காமையால் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். அதன் பிறகு இயக்குநர்கள் மணிரத்தினம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநர்களாகவும் சில காலம் பணியாற்றினார்.
2005ஆம் ஆண்டு சாதுரியன் படத்தில் நடித்து வந்த போது, உடன் நடித்த நடிகை நந்தனா என்ற நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என 2 மகள்கள் உள்ளனர்.
சாதுரியன் படத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்த மனோஜ், சமீப காலமாக மீண்டும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். கடைசியாக அவர் 2022ல் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
