அகமதாபாத் விமான விபத்து!

இந்தியாவில் ஏர் இந்தியாவின் AI171 விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏர் இந்தியாவின் AI171 விமானம், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேரை ஏற்றிக்கொண்டு அகமதாபாத்திலிருந்து- லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமானம் உயரத்தை எட்ட சிரமப்பட்ட நிலையில் மேகானி நகர் (Meghani Nagar) பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த பயணிகளும், தரையில் இருந்தவர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்த்துகீசிய நாட்டவர்கள் மற்றும் ஒரு கனேடிய நாட்டவர் அடங்குவர்.

இவர்களில் உயிர் பிழைத்த ஒரே நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரான விஸ்வாஷ் குமார் ரமேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், பாதிக்கப்பட்ட அனைவரின் தேவைகள், அவர்களது குடும்பத்தினர் மீது முழுமையாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஷ் குமார் ரமேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

விமானம் புறப்பட்ட முப்பது வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது” என்று தெரிவித்தார்.

விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply