இஸ்ரேல் – ஈரான் போரால் பதற்றம்!

ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளது.

ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா, எந்தவித ஆதரவோ அல்லது உதவியோ வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்தமையை ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை இலக்காகக் கொண்டு, IAF ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவாகக் கருதப்படும் ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர படையின் தலைமையகம் ஆகும்.

மேலும், ஈரானிய இராணுவத் தலைவர் மொஹமட் பாகெரி உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் பலரும் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பாகெரி, 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் மிக உயரிய இராணுவ பதவியை வகித்து வந்தவர் ஆவார் மற்றும் அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவிக்கையில்,

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் அதன் மூலம் தமது மக்களைப் பாதுகாப்பது இந்தத் தாக்குதலின் நோக்கம் என தெரிவித்ததுடன், தேவையான எந்த நேரமும் ஈரானை தாக்குவது தமது திட்டம் எனவும், இது முதல் தாக்குதல் மட்டுமே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், “டஜன் கணக்கான இலக்குகள்” தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் உயர்மட்ட இராணுவத் தலைவர்களும், அணு விஞ்ஞானிகளும் அடங்குவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் மொஹமட் பாகெரியின் மரணம் தொடர்பாக ஈரான் அரசு மற்றும் இஸ்ரேல் ஆகியவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள் முரண்பாட்டுடன் உள்ளன. ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை அளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தநிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply