ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடாத்தியிருந்தது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவி நேற்று தாக்குதலை நடாத்தியிருந்தது.
இந்தநிலையில் இன்றும் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இதனால் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிரத் தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வசிக்கும் மையங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் “சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது” என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களுக்கு மிகப் பெரிய பதிலடி கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது.
இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது.
“தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இதேவேளை, தாக்குதலில் டெல் அவிவ் பெருநகரப்பகுதியில் பலர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
