ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம்- 02ஆவது நாளாகவும் தொடர்கிறது!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 61 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் 61 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 09 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் வக்கியுறுத்துகின்றனர்.

மத்திய அரசாங்கம் உடனடியாக இலங்கையுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

மேலும் கைதானவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் விடுதலை தாமதமாகும் பட்சத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி கண்டன போராட்டமும், இந்திய சுதந்திரதினமான 15ஆம் திகதி அன்று உணவு தவிர்ப்பு போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply