கோப் குழுவை வலுப்படுத்த புதிய திருத்தம்!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான நிலையியற் கட்டளையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவினால் இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 137ஆவது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய குறித்த குழு தொடர்பில் தற்பொழுது காணப்படும் 120(4) நிலையியற் கட்டளையைத் திருத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கைகளைப் பரிசீலிக்கும் போது பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குழு தீர்மானிக்குமானால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது.

அத்தகைய சம்பவங்களை நேரடியாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு அல்லது பொலிஸ்மா அதிபருக்கு கோப் குழுவினால் ஆற்றுப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தீர்மானத்தை ஆராய்வதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply