இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்களை ஒரே இரவில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்திய மீனவர்கள், தலைமன்னாரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கு ரோந்து பணி மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
இதன்போது அவர்களிடம் இருந்த 4 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களை இன்று காலை மன்னார் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை நெடுந்தீவு கடற்பரப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களும் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கையின் மூலம் ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 47 பேர் கைதாகியுள்ளதுடன், 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
