அரியாலை பகுதியை குப்பை மேடாக்கும் முயற்சியை தடுக்க போராடியவர்களை பொலிஸார் பொய் குற்றம் சாட்டி கைது!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து தடுத்து நிறுத்திய 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்றையதினமும் நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனத்தில், குறித்த இடத்திற்கு கழிவுகளை கொண்டு வந்த சமயம் அப்பகுதியில் மக்கள் கூடி வாகனத்தை மறித்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்தவர்களோடு பேச்சுக்களை நடத்தி, வாகனத்தை செல்ல அனுமதிக்குமாறு கோரியதை அடுத்து, வாகனத்தை செல்ல மக்கள் அனுமதித்தனர்.

எனினும் யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிடத்தினர் அப்பகுதியில் உள்ள தமது காணி ஒன்றில் கழிவுகளை கொட்ட வந்த போது, அவர்களின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடாவடியில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றம்சாட்டி 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியாலை பகுதியை குப்பை மேடாக்கும் முயற்சியை தடுக்க போராடியவர்களை பொலிஸார் பொய் குற்றம் சாட்டி கைது செய்த சம்பவம் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply