மன்னார் மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகரசபை சுகாதார குழுவினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி இன்றையதினம் (09) மன்னார் மூர் வீதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றினுள் இயங்கி வந்த உணவகத்தில் முன்னெடுக்கப்பட சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.
குறிப்பாக உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாத நிலை, தலையுறை மற்றும் கையுறை அணியப்படாத நிலை, அதிகளவான இளையவர்கள் பணியமர்த்தப்பட்டிருத்தல், கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாத நிலை, அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருத்தல், அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டிருத்தல் போன்ற பல்வேறு குறைபாடுகள் குறித்த உணவகத்தில் அவதானிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மன்னார் நகரசபை பகுதிக்குள் இயங்கி வரும் உணவகங்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வரும் நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வரும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
