2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், 2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம், மற்றும் 2025 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க ஊழியர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம் ஆகியன 2025.04.01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 2025.07.22 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய 2025.04.01 ஆம் திகதி முதல் மாதாந்த தேசிய குறைந்தபட்ச சம்பளம் 17,500 ரூபாவிலிருந்து 27,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படுவதுடன், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மாதாந்த தேசிய குறைந்தபட்ச வேதனம் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அதிகரிக்கப்பட்ட மாதாந்த குறைந்தபட்ச சம்பளமானது, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி, மேலதிக நேரக் கொடுப்பனவு, பணிக்கொடை, மகப்பேற்றுக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற அனைத்து சட்டரீதியான கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை அமுல்படுத்துவதற்காக தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழில் அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சரியான வகையில் அதனை அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
