வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம்- முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள்!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது நேற்று (22) துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது.

லசந்த விக்ரமசேகர மிதிகம பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர்.

நேற்றையதினம் (22) காலை 10.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, ​​பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் தலைவரை பொது மக்கள் சந்திக்கும் நாள் என்பதால், பொதுமக்கள் அவரைச் சந்திக்க நேரம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி மக்களுடன் காத்திருந்துள்ளார்.

இதன்போது, பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றில் கையெழுத்தைப் பெற்று வௌியில் வந்த வேளை, துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூடுக்கு பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், நான்கு தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்த தலைவரை அங்கு கூடியிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய சூழ்நிலை எழுந்தது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் லசந்த விக்ரமசேகரவின் மரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாளடாளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தத் தவிசாளர் என்பவர் மக்கள் பிரதிநிதியொருவராவார். மக்கள் பிரதிநிதிகளால் கூட பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாவிட்டால், இது தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையொன்றாக அமைந்து காணப்படுகின்றது என- எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, நான்கு குழுக்கள் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில் வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையுடன், பாதாள உலக குழு நடவடிக்கைகள் குறித்த பேச்சுகள் சமூகத்தில் எழுந்துள்ளன.

இதற்குக் காரணம், ‘சன்ஷைன் சுத்தா’ என்ற குற்றவியல் கும்பல் உறுப்பினரின் கொலையில் உயிரிழந்த பிரதேச சபை தலைவர் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையை அனுபவித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லசந்த விக்கிரமசேகர, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் தற்போது சிறையில் உள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நதுன் சிந்தகவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஹரக் கட்டாவின் கும்பலின் தலைவர்களான ‘மிதிகம சூட்டி’ மற்றும் மிதிகம ருவானுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் மிதிகம ருவான் அந்தக் குழுவிலிருந்து பிரிந்ததன் பின்னர், அவரால் லசந்த விக்ரமசேகரவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறையில் இருக்கும் மிதிகம ருவான், அங்கிருந்து பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

”மாண்புமிகு தலைவரே, நீங்கள் இப்போது வெள்ளை நிறத்தை அணிந்துள்ளீர்கள். ​​நீங்கள் கருப்பு நிறத்தில் அணிந்திருந்த போது ​​நாங்கள் அனைவரும் ஒரே படகில் பயணித்தோம் என்பதை மறவாதீர்கள். பொய்யாக நாடகமாடி என் பையன்களில் எவரையேனும் சிறையில் அடைக்க முற்பட்டால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும் என மிரட்டல் விட்டு ஒரு பதிவை இட்டிருந்தார்.

அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட லசந்த விக்ரமசேகர கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் தமது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்ததுடன் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரினார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

“நான் நீதிமன்றத்திற்கு வரும்போது அல்லது பிரதேச சபைக்குச் செல்லும்போது அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இது தொடர்பாக பல பெரிய பாதாள உலகக் கும்பல்கள் என்னை மிரட்டியுள்ளன. அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று கூறியதாக நம்பகமான தகவல் எனக்குக் கிடைத்துள்ளது என்பதை நான் அறிவேன். மிதிகமவைச் சேர்ந்த ருவான் என்கிற ருவான் ஜெயசேகர என்ற நபர் சமூக ஊடகங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து பேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் என்பதை நான் அறிந்தேன். இந்த சூழ்நிலைகள் அனைத்தினாலும் எனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக நான் உணர்கிறேன். மேலும் அந்த அச்சுறுத்தல்கள் இப்போது மிக வேகமாக அதிகரித்துள்ளதால், எனது உயிருக்கான பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த நேரத்தில் அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், தலைவர் பல்வேறு இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் கூட்டங்களுக்காக மட்டுமே வெலிகம பிரதேச சபைக்கு வருகை தந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் லசந்த விக்ரமசேகரின் கொலை மிதிகம ருவானின் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலை, அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்பதில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பு இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டதையும், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அதிகாரத்தைப் பெறுவதற்காக பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெற்றிகொள்ள தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாகவும், வேறு தந்திரோபாயங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் எதிர்க்கட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில் வெற்றி பெற்ற தலைவரின் படுகொலை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாக இருக்கலாம் என்று சந்தேகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல கருத்துக்களும், சந்தேகங்களும் வெளியிடப்பட்டு வரும் நிலையில், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் 4 குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply