2025ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்கு ஏற்ற வலயக் கல்வி அலுவலகத்தின் தேர்வுப் பாடத்திற்குப் பொறுப்பான உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளின் பெயர்கள், மற்றும் பாடங்களில் ஏதேனும் திருத்தங்கள் காணப்படும் பட்சத்தில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலைத்தளம் மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் 31 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 2362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி 1665 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
