ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (28) அதிகாலை குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதானவர் 21 வயது கனேடிய பிரஜை எனவும் அவர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
அவரது பயணப் பைகளை சோதனை செய்த வேளையில், 18.253 கிலோகிராம் ஹாஷிஷை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவை ஆறு பெரிய பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 சிறிய பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட கனேடிய நாட்டு பிரஜையும், கைப்பற்றப்பட்ட ஹாஷிஷும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
