கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் கடவத்தை பகுதியில் வைத்து நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தின் போது இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ, வழக்கு விசாரணையொன்றிற்காக கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி அன்று புதுக்கடை நீதிமன்ற வழக்கத்துக்கு அழைத்துவரப்பட்ட வேளையில், அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த துப்பாக்கிதாரி அன்றையதினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷார செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
எனினும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இஷார செவ்வந்தி கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
