முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி, கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளித்த வேளையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்றைய தினம் (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

கடந்த வழக்கு தினத்தில் நீதிமன்றம் சார்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பான நபர்கள் யார், அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அடுத்த வழக்குத் திகதியன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply