சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தென் கொரியாவின் பூசன் (Busan) நகரில் இன்று (30) நடைபெற்றது.
இதன்போது சீன ஜனாதிபதி, சீனா மற்றும் அமெரிக்காவின் தேசிய நிலைமைகள் வேறுபடுவதால், கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றது என்றும், உலகின் இரண்டு மாபெரும் பொருளாதாரங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவது சாதாரணமானதுதான் என்றும் அங்கு சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த அமைதியின்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் சீன-அமெரிக்க உறவுகள் சீராகவும், சுமூகமாகவும் செல்வதை உறுதி செய்வதற்காக, தாமும் ஜனாதிபதி டிரம்பும் தலைமை ஏற்று சரியான திசையுடன் ஒட்டுமொத்த நிலைமையையும் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றும் சீன ஜனாதிபதி கூறினார்.
சீனாவின் வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறுதல் என்பது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குதல்’ என்ற இலக்குக்கு முரணானது அல்ல என்று ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பர வெற்றியையும் பொதுவான செழிப்பையும் நிச்சயமாக அடைய முடியும் என்றும், சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது வரலாற்றிலிருந்து கிடைத்த அனுபவம் மட்டுமல்ல, யதார்த்தமான தேவையும் ஆகும் என்றும் சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன-அமெரிக்க உறவுகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தொடர்ந்து பணியாற்றத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
