இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சுற்றாடல் அமைச்சின் கீழ் புதிய பிரிவு ஒன்று, இன்று (03) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ‘வனப் பாதுகாப்பு’ கூட்டு செயல்பாட்டுப் பிரிவு’ சுற்றாடல் அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸ் விஷேட அதிரடிப்படை மற்றும் முப்படையின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள்.
‘வனப் பாதுகாப்பு’ கூட்டு செயல்பாட்டுப் பிரிவு, 1995 என்ற துரித தொலைபேசி இலக்கம் ஊடாக 24 மணி நேரமும் இயங்கும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி இயக்கத்தின் ஊடக, இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வனக் குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அந்தக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் நம்பகத்தன்மையுடன் தகவல்களை வழங்கக்கூடிய பின்னணியை உருவாக்குவதற்கும் இந்த செயல்பாட்டுப் பிரிவைச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய குறித்த செயல்பாட்டுப் பிரிவை சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி ஆகியோரின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
