கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 10 பேர் கைது- விசேட அதிரடிப்படையினர் மீதும் தாக்குதல்!

கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய குழுவை இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்றிருந்தனர்.

இதன்போது இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்த வேளையில் இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது.

இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட ஐந்து (05) ஆண் சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply