வவுனியாப் பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம்- பகிடிவதையே காரணம் என உறவினர் குற்றச்சாட்டு!

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் (01) சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது உயிரிழப்புக்கு பகிடிவதையே காரணம் என மாணவனின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை முதல் நள்ளிரவு வரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மது விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த மாணவனுக்கு மது கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் குறித்த மாணவனை பிறிதொரு மாணவனின் விடுதியில் மாணவர்கள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை குறித்த மாணவன் எழுந்திருக்காத நிலையில், ஏனைய மாணவர்கள் குறித்த மாணவனை பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், இந்த திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விசாரணையின் போது உயிரிழந்த மாணவரின் சகோதரி தெரிவிக்கையில்,

கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகவும், தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் சகோதரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply