பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
சடலமாக மீட்கப்பட்டவர் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா ஆவார்.
விசாரணையின் போது குறித்த பெண் கடந்த 11ஆம் திகதி வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
எனினும் குறித்த பெண் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டிருந்தார்.
அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக உடற்கூற்றாய்வில் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் 32 வயதுடைய அதே மருந்தகத்தின் உதவியாளரும் ஆவர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
