இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் (6) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 மீனவர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மன்று உத்தரவிட்டது.

படகு தவிர்ந்த ஏனைய சான்றுப் பொருட்களை அரச உடமையாக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply