போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ‘மஹரகம அக்கா’ கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ‘மஹரகம அக்கா’ என அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை விசாரித்ததில் குறித்த பெண் நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணிடம் போதைப்பொருள் வாங்கியவர்களின் தொலைபேசிப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்தவேளையில், சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நவம்பர் 6ஆம் திகதி வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவருடைய இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூபா 1,41,000 பணம் மற்றும் 32 கிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டன.

சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கையில்,

“‘மஹரகம அக்கா” நீண்டகாலமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply