குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் அதிகமாகத் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் தங்கியுள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களில் 80 பேர் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட, திட்டமிட்ட குற்றக்குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள குற்றக் குழு உறுப்பினர்களில் பலர் அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் போல சென்று அவர்கள் அங்கு தங்கியுள்ளதாகவும் அவர் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் அதிகமாகத் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக விசேட குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளார்கள் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும் இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில்,
இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து தனக்குத் தெரியாது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே பாரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பொலிஸாருக்கு இது குறித்து தகவல் கிடைத்திருக்கலாம், அவர்கள் அதன்படி செயல்படுவார்கள்- என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாவூத் இப்ராஹிம் குழு, தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் தாவூத் இப்ராஹிம் குழு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது.
இதனால், புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக அந்த எச்சரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
