தம்புள்ளை, இஹல எரவுல பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த மாணவி நேற்று (09) இரவு தனது அறையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், இன்று அதிகாலை அவர் கண் விழிக்காதமையால் பெற்றோர் சென்று பார்த்தபோது, அவர் அறையில் உணர்வு இழந்த நிலையில் இருந்ததைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர் உடனடியாக மாணவியை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியர்கள் அவரைப் பரிசோதித்தபோது, வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன் தம்புள்ளை பொலிஸார் மாணவியின் வீட்டுக்குச் சென்று சோதனை நடாத்தினர்.
எனினும் சந்தேகப்படும்படியான எதுவும் அங்கு கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், மாணவியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
