வெளிநாட்டு பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண், மற்றுமொரு பெண்ணுடன் குறித்த ஹோட்டலின் விசேட விருந்தினர் அறையில் தங்கியிருந்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாத நேரத்தில் ஒருவரின் பணப்பையை சந்தேகநபர் ஒருவர் திருடியுள்ளார்.
இது தொடர்பில் கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணின் பணப்பையில் இருந்த திராம் (Dirham) மற்றும் யூரோ (Euro) பணம் (இலங்கை மதிப்பில் ரூபா 330,000) காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் விரைந்து செயல்பட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாத நேரத்தில் இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணத்தை ஜ-எல பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் மாற்றி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
