பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

இன்றைய (24) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது மனித உரிமை என்பதை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் வன்முறையின்றி வாழ்வதற்கு உரிமை உண்டு என்றும், பிறரை வன்முறைக்கு உட்படுத்தாமல் வாழ்வது எமது பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாவதுடன், இது டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும்.

பெண்களை இழிவுபடுத்தல், அவதூறுகளை எழுப்புதல், அவமானம்மிக்க பேச்சுகளுக்கு வழிவகுத்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு அவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் முறைபாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி சமூகத்தில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள், காவல்துறையின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் 109 என்ற இலக்கம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய உதவி சேவையின் 1938 என்ற இலக்கம், இலங்கை கணினி அவசர ஆயத்த அணியின் 101 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு தெரியப்படுத்த முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு சமாந்தரமாக இலங்கை முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போது தெரிவித்தார்.

வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது மனித உரிமை என்பதை அடிப்படையாகக் கொண்டு, 1991 ஆம் ஆண்டிலிருந்து இது குறித்து உலகம் முழுவதும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.

டிஜிட்டல் வெளிக்குள் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழித்தல், அதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடம்பெறும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த வருடம் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் அங்கு வலியுறுத்தினார்.

அரசியல் ரீதியாக முரண்பட்ட கருத்துக்கள் ஒருவருக்கொருவர் காணப்பட்டாலும், மற்றவரின் தனிப்பட்ட விடயங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், அவர்கள் வன்முறைக்கு உள்ளாகும் வகையிலும் வெறுப்புப் பேச்சுகளை வெளியிடுவதை நிறுத்துவதை நாடாளுமன்றத்திற்கு உள்ளிருந்தே ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply