இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவியை நாடியுள்ள இலங்கை!

நாட்டில் நிலவி வரும் தற்போதைய வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியாவின் விமானந் தாங்கி கப்பலான விக்ராந்த் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு, விரைவான வான்வழி மீட்பு நடவடிக்கைகளுக்கு அவசியமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலில் உள்ள விமானங்களைப் பயன்படுத்துவதற்கு உதவி கோரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாதகமான வானிலை இந்திய விமானங்களையும் பாதித்து வருவதாகவும், தற்போதைய நிலைமைகள் காரணமாக விமான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக, இந்திய விமானிகளால் விமானத்தை இயக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதர்களுடன் இன்று மாலை ஒரு சிறப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் போது தற்போதைய நிலைமை மற்றும் தொடர்ச்சியான பேரிடர் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையான ஆதரவு குறித்து அவர்களுக்கு விளக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் பொலிஸ் இணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply