இலங்கை தற்போது எதிர்கொண்ட அனர்த்த நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி அனைத்துக் கட்சித் தலைவர்களும் எதிர்வரும் புதன்கிழமை (03) கொழும்பு, புளவர் வீதியில் உள்ள அரசியல் அலுவலகத்தில் கூடவுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான இயற்கை அனர்த்தங்களின் போது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
2003 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்துவார் என்றும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட கடுமையான அனர்த்தத்திற்குப் பிறகு, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரே இடத்திற்கு அழைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
