யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது.
இதன்போது காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் மூன்று நாட்களுக்கு பின் இன்றைய (01) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுரியும் 36 வயதுடைய தணிகாசலம் பத்மநிகேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து கலா ஓயா பகுதியில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி மூழ்கியது.
அதிலிருந்த பயணிகள் அப்பகுதியிலிருந்த கட்டிட கூரையின் மேல் ஏறி தமது உயிர்களை பாதுகாத்திருந்தனர். ஒரு நாளின் பின்னர் அவர்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்
பின்னர் நொச்சியகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதன்போது குறித்த நபரின் பெயர் மருத்துவமனை அனுமதி பட்டியலில் இல்லை என்பதால் உறவினர்கள் அவரை தேடத்தொடங்கினர்.
அவர் இறுதியாக வெள்ளிக்கிழமை மாலையில் தொலைபேசியில் பேசியுள்ளார். பேருந்தில் பயணிகள் இருக்கும் காணொளியிலும் கட்டட கூரைமேல் இருக்கும் பயணிகளில் குறித்த நபரும் இருக்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன. அதை காண்பித்து உறவினர்கள் தேடும் போதே அவர் காணாமல் போனமை தெரியவந்துள்ளது.
கட்டிடத்தின் கூரை ஒரு தருணத்தில் முறிந்ததாகவும் அப்போது அவர் சிலரை காப்பாற்றியதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் அவர் வெள்ளத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்திருந்தனர் .
இந்த சம்பவம் தொடர்பாக நொச்சியகம காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அத்துடன் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவரும் குறித்த நபரை கடந்த 3 நாட்களாக தேடி வந்ததனர்.
இந்தநிலையில் குறித்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
