அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியது.
இதனைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்த நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி ஒருவருக்கு வழங்கக்கூடிய துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், அனுமதிப்பத்திர மீளாய்வு காலப்பகுதியொன்றை அறிமுகப்படுத்தல் போன்றவை தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சிட்னி பொண்டி கடற்கரையில் நேற்று (14) இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தொடரில் 10 வயதுச் சிறுமி உட்பட 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் இருவரும் 50 வயதுடைய சஜிட் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகனான நவீட் அக்ரம் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நடவடிக்கையின் போது சஜிட் அக்ரம் என்பவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சஜிட் அக்ரம் என்பவர் 1998ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன், அவரது மகனான நவீட் அக்ரம் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் எனவும், அவர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2019ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சஜிட் அக்ரம் என்பவர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக 2015ஆம் ஆண்டிலிருந்து துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
