தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த போதும் இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்துவதற்குத் தமிழ்த் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நாளையத்தினம் (23) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்திக்கும்போது அந்தக் கடிதத்தைக் கையளிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில்,
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, இந்தியாவிடம் அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கைவிடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வானது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்தக் கடிதத்தில் உள்வாங்கப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த தினத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஜெய்சங்கரின் இலங்கைக்கான திடீர் பயண ஒழுங்கின் காரணமாக அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
