அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் வைத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (24) கைது செய்யப்பட்டார்.
கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை அம்பலாங்கொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த இனம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், முகாமையாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் குருந்துவத்த – அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்தநிலையில் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
