இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் நேற்று முதல் டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ், போக்குவரத்துச் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கோடும், பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையிலான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கோடும் அரச பேருந்துகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றையதினம் மாகும்புர பல் நிலை போக்குவரத்து மையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தலைமையில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக இன்று முதல் மாகும்புர – காலி மற்றும் மாகும்புர – எம்பிலிபிட்டிய ஆகிய வழித்தடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
