2026ஆம் ஆண்டில் நடைபெறும் ரோட்டரி இன்ஸ்டிடியூட் மாநாட்டை நடத்தும் அதிபதித் தளமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முக்கிய நிகழ்வை இலங்கை மீண்டும் நடத்துவது குறிப்பிடத்தக்க ஒரு தருணமாகும்.
2026 டிசம்பர் 18 முதல் 20 வரை இலங்கை ரோட்டரி இன்ஸ்டிடியூட் 2026 மாநாட்டை நடத்தவுள்ளது.
ரோட்டரி இன்ஸ்டிடியூட் மாநாடு, ஜான் கீல்ஸ் நிறுவனத்தின் முக்கிய சொத்தான Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற உள்ளது.
ரோட்டரி மண்டல இன்ஸ்டிடியூட் என்பது ரோட்டரி இன்டர்நேஷனல் மண்டலங்கள் 4, 5, 6 மற்றும் 7 க்கான ஆண்டு தலைமைத்துவ மாநாடாகும்.
இதில் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் அடங்கும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் தற்போதைய, முன்னாள் மற்றும் வரவிருக்கும் ரோட்டரி தலைவர்கள் மற்றும் மூத்த ரோட்டரி அதிகாரிகள் ஒன்றுகூடி, மனிதநேயத்துடன் தொடர்புடைய சமகால பிரச்சினைகள், சமீபத்திய போக்குகள் மற்றும் பிராந்தியத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதிப்பதுடன், தலைமைத்துவத்தில் சிறந்து விளங்கும் முக்கிய ஆளுமைகளையும் மேடையில் அறிமுகப்படுத்துகிறது.
பாடல் உலகின் பிரபல பாடகியும் முன்னாள் ரோட்டராக்ட் தலைவருமான யோகானி, Cinnamon Life உடன் இணைந்து நடைபெற்ற ரோட்டரி இன்ஸ்டிடியூட் 2026 இன் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் பாடல் நிகழ்ச்சி வழங்குவதற்காக டெல்லிக்கு பயணித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த 1400 ரோட்டரி தலைவர்களை நேரடியாக அழைத்து, 2026ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்குமாறு யோகானி அழைப்பு விடுத்தார்.
இந்த தொடக்க விழா, ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் பிரான்சிஸ் அசேஸேரோ முன்னிலையில் நடைபெற்றது மற்றும் முதல் நாளின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வின் போது ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநரும், இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முருகானந்தம் எம் (MMM) அவர்கள் கருத்து தெரிவிழிக்கையில், “முக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் வகையில் சில சமகால தலைப்புகள் குறித்து நாம் விவாதிக்க உள்ளோம். மனிதகுலத்திற்கு மேலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என தெரிவித்தார்.
ரோட்டரி இலங்கை மற்றும் மாலத்தீவின் முதல் பெண் ஆளுநரான கௌரி ராஜன், ரோட்டரி இன்ஸ்டிடியூட் 2026 இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ரோட்டரி இலங்கை வரலாற்றில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாகும்.
தென் ஆசியாவைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட ரோட்டரி ஆளுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இலங்கை சுற்றுலா துறைக்கு 10 இலட்சம் அமெரிக்க டாலர்களை விட அதிகமான வருமான பங்களிப்பு கிடைக்கும் என, ரோட்டரி இன்ஸ்டிடியூட் 2026 இன் தலைவர் கௌரி ராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
