பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் அவதானம்!

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட் மற்றும் சாரவிட ஆகியவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுவதாக தெரிவித்தார்.

இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இது தொடர்பில் இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், இது குறித்து எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் எச்சரித்தார்.

இதன்படி கொக்கெய்ன், ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை 5 கிராமுக்கு மேல் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது நெருங்கியவர்கள் இந்த போதைப்பொருள் அபாயத்திற்கு பலியாவதற்கு முன்னர், தமது பிரதேசங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது குறித்து தகவல் வழங்குவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply