6ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்தொகுதி நீக்கப்படவில்லை எனவும், அதனை 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முன்மொழிந்துள்ளோம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது. நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இது தொடர்பாகத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
6ஆம் தரத்தின் முதலாம் தவணைக்கான பாடத்தொகுதிகளே அச்சிடப்பட்டுள்ளன. அவற்றுள் எதனையும் நாம் நிராகரிக்கவோ அல்லது நீக்கவோ இல்லை.
6ஆம் தரத்திற்கான திட்டத்தை 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முன்மொழிந்துள்ளோம். 2027இல் அதனை நடைமுறைப்படுத்தும்போது அவற்றைப் பயன்படுத்துவதற்கே நாம் திட்டமிட்டுள்ளோம். அதனை தற்போது நீக்கவோ அல்லது நஷ்டம் ஏற்படும் வகையிலான எந்தவொரு தீர்மானத்தையோ நாம் எடுக்கவில்லை.
6ஆம் தரத்திற்கான பாடப்புத்தகங்களை நாம் ஏற்கனவே அச்சிட்டுள்ளோம், தற்போது களஞ்சியசாலைகளில் உள்ளவற்றை விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம்.
பெப்ரவரி மாத நடுப்பகுதிக்குள் அனைத்துப் பாடப்புத்தகங்களையும் விநியோகிக்கத் தயாராக உள்ளோம். ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பித்துள்ளனர். பழைய பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளதால் ஆசிரியர்களால் அவற்றைக் கற்பிக்க முடியும்- என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
