சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்நாளை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.
தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்திருந்தன.
போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு சென்றது.
இந்நிலையில் கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள திறன்விருத்தி நிலையத்தில் மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் அப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், அங்கு இரு சாராருக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சம்பவ இடத்தில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டதோடு, விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு நீதி வேண்டி கடும் கோஷங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
