2027ஆம் ஆண்டு அடுத்த சம்பள உயர்வு வரும் வரை வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் கண்டி மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சேவையைப் பொறுத்தவரை அடிப்படைச் சம்பள உயர்வே முக்கியம் என்று நாங்கள் கருதினோம். அந்த அடிப்படைச் சம்பள உயர்விற்காக மாத்திரம் 2025ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு இந்த ஜனவரி மாதத்திலேயே மேலும் 11,000 கோடி ரூபா செலவிடப்படுகிறது. 2027 இல் அடுத்த கட்டமாக 11,000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.
2027 ஆகும்போது எமது அரச சேவையின் சம்பள உயர்வுக்காக மாத்திரம் நாங்கள் ஏற்கும் செலவு 33,000 கோடி ரூபாவாகும். இவ்வாறு சம்பள உயர்வு செய்திருக்கும் நிலையில், சிலர் மீண்டும் இந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள், அந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள் என்று கேட்பதை நான் காண்கிறேன். அது நடக்காது. முதலில் நாங்கள் 2027 இல் மூன்றாவது சம்பள அதிகரிப்பு வந்த பின்னர், எமது வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்படும் தாக்கத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஏனைய கொடுப்பனவுகள் பற்றி யோசிப்போம். அதனால் யார் எவ்விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்தாலும், வீதியில் இறங்கினாலும் 2027ஆம் ஆண்டு அடுத்த சம்பள உயர்வு வரும் வரை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட மாட்டாது.
இந்த அனர்த்தத்தினால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனப் பலர் நினைத்தார்கள். ஆனால் இரண்டு மாதங்களுக்குள் நாங்கள் ஒட்டுமொத்தமாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம். மின்சாரம், வீதிகள், தொடர்பாடல், நீர் எனப் பாரிய அளவில் மீண்டுள்ளோம். எமக்குத் தேவை இந்த நாடு அடையும் பொருளாதார வெற்றிகளை நாட்டு மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதேயாகும்.
அதேபோல் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதைச் செய்தே தீருவோம், யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு ஏதுவான சட்டத்தை நாங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவேற்றினோம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்தி விரைவில் கொண்டு வருவோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குச் சட்டம் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் பணமோசடியைத் தடுப்பதற்கு சர்வதேசத் தரத்திற்கு அமைய சட்டமொன்றைத் தயாரிக்கப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
சட்டத்தின் கோடு ஒன்று உள்ளது. அந்தக் கோட்டிற்குக் கீழேதான் அனைவரும் உள்ளனர். யாரும் சட்டத்தின் கோட்டிற்கு மேலே பாய முடியாது. அப்படியான ஒரு நாடுதான் எமக்குத் தேவை. அதனை நாங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாற்றம் சிலருக்கு வலிக்கிறது. தவறு செய்பவர்களுக்கு இந்த மாற்றம் வலிக்கிறது- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
