சட்டவிரோதமாக அந்தூரியம் செடிகளை நாட்டுக்கு எடுத்து வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும், அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், பல்லுயிர் கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இருவரும் தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 436 அந்தூரியம் செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும், அந்தச் செடிகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான விவசாய திணைக்களத்தின் இறக்குமதி அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை.
வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் தாவரங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிகளை மீறி அவர்கள் இந்த செடிகளை கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரு பெண்களும் தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
