நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் அலங்கார மலர்ச் செடிகளை எடுத்து வந்த இலங்கை பயணி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் உயிர்ப்பல்வகைமை, கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று (10) அதிகாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸின் TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிலோடென்ட்ரான் (Philodendron), அக்லோனிமா (Aglaonema), அலோகாசியா (Alocasia) மற்றும் மொன்ஸ்டெரா (Monstera) ஆகிய அரிய வகைச் செடிகள் உட்பட 386 அலங்கார மலர்ச் செடிகள் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
