‘தேசிய கனிய வளங்கள் கொள்கை – 2026’ இனை நடைமுறைப்படுத்துவதற்காகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய கனிய வளங்கள் கொள்கையானது, தற்போதைய அரசாங்கத்தின் ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்தின் ‘பேண்தகு வளப்பயன்பாடு – உயரிய அனுகூலங்களைப் பெறல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ள கொள்கைக் கோட்பாடுகளுக்கு அமைவாக மீண்டும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தேசிய கனிய வளங்கள் கொள்கை’ முதன்முறையாக 1999ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.
அதன் பின்னர் கனிய வளங்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தரவுக்கட்டமைப்பை உருவாக்குதல், கனிய வளப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பெறுமதி சேர்த்தல், கனிய வளம் சார்ந்த கைத்தொழிலாளர்களை ஊக்குவித்தல், கனிய வள அகழ்வு மற்றும் சுற்றாடலைப் பேண்தகு வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் கனிய வள அகழ்வின் போது ஏற்படும் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி 2023 ஆம் ஆண்டில் தேசிய கனிய வளங்கள் கொள்கை திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
