நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில் பெண் ஒருவரின் சடலத்தை அவமரியாதை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை என வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்களினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவும், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் நியமிக்கப்பட்ட குழுவும் விசாரணைகளை மேற்கொண்டது.
சி.சி.ரி.வி காட்சிகள், சாட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மருத்துவ அத்தியட்சகர் குறிப்பிட்டார். அவற்றை ஆதாரமாக கொண்டு விசாரணைக் குழுக்களால் தயார் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் இன்று மாலை தமக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி உயிரிழந்த யுவதி ஒருவரின் உடலம் கிளங்கள் ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.
அதற்கு மறுநாள், மருத்துவமனை பணியாளர்கள் மூன்றுபேர், உடலத்தை அவமரியாதைககு உட்படுத்தியதாக தெரிவித்து, பொதுமக்களின் எதிர்ப்பு வெளியாகியது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , குற்றசாட்டு குறித்த ஆதாரங்கள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
