மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிக்காக புதிய திட்டம்!

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஒப்பந்தத்தின்படி குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்ததாகவும், அமைச்சரவையின் அனுமதி மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இது கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த நிறுவனத்துடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளின்படி, இரண்டு மாத காலத்திற்குள் இப்பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியானது எனவும், இன்று முதல் ஐந்து ஆண்டுகாலத்திற்கு அந்த நிறுவனத்திற்கு இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“வேரஹெர பகுதியில் அமைந்துள்ள எமது அலுவலக வளாகத்தில் போதிய இடவசதிகளுடன் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த பத்து மாதங்களாக இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதனால் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கச் சற்று காலம் எடுக்கும்.

எவ்வாறாயினும், ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத முற்பகுதியில் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக மூன்று மாதங்கள் வரை காத்திருக்கப் போவதில்லை. குறித்த நிறுவனம் ஏற்கனவே எமது வேரஹெர வளாகத்தில் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன், இதற்குத் தேவையான அச்சிடும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மூன்று வாரங்களுக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும் என்றும் அந்நிறுவனம் இன்றைய கலந்துரையாடலில் அறிவித்துள்ளது.” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply