இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள அகதிகள் தங்கும் விடுதியில், ஊழியர்கள் இருவரைத் தாக்கியதுடன் அவர்கள் முன்னிலையில் அநாகரீகமான முறையில் நிர்வாணத்தை வெளிப்படுத்திய இலங்கை நபர் ஒருவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
38 வயதான சுகீர்தன் தங்கராசா என்ற நபரே இவ்வாறு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2025 ஒகஸ்ட் 15 அன்று சவுத்தாம்ப்டனில் உள்ள ‘ஹைஃபீல்ட் ஹவுஸ்’ ஹோட்டலில், தனது அலைபேசி வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த குறித்த சந்தேகநபர், ஹோட்டல் வரவேற்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
“நான் இலங்கையைச் சேர்ந்தவன். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உங்களைப் போன்ற சிறிய மனிதர்கள் எனக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என அவர் இன ரீதியாக ஊழியர்களை இழிவுபடுத்தியுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் போது அவர் தனது நிர்வாணத்தை வெளிப்படுத்தியதோடு, அதனைத் தடுக்க முயன்ற ஊழியர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.
அநாகரீகமாக நடந்துகொண்டதை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அது மற்றவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் செய்யப்படவில்லை என வாதிட்டார்.
எனினும் சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்த ஜூரி சபை அவரை குற்றவாளி எனத் தீர்மானித்தது.
