‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம்!

திருமறைக் கலாமன்றத்தால் அரை நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண்டு ‘காவிய நாயகன்’ என்னும் பெயரில் மேடையேற்றப்படவுள்ளது.

அதன்படி இவ்வாண்டு ‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்களுக்கு மாலை 6.45 மணிக்கு இல.238 ,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.

திருமறைக் கலாமன்றம் தனது அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து பிரமாண்டமான படைப்பாக தயாரித்தளிக்கும் திருப்பாடுகளின் நாடகத்தை ஆண்டுதோறும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள்.

திருப்பாடுகளின் நாடகமரபில் தனக்கென்றொரு தனித்துவத்தை தக்கவைத்திருக்கும் திருமறைக் கலாமன்றம் இவ்வாற்றுகையை காலத்திற்கேற்ற அரங்க நுட்பங்களை, சிந்தனைகளை உள்வாங்கி புதிய புதிய பார்வைகளுடன் மேடையேற்றி வருகின்றது.

இம்முறை மேடையேற்றப்படும் ‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம் திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் நீ. மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவாகி முதன்முதலாக 2001ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து 2004, 2008, 2013, 2022ஆம் ஆண்டுகளிலும் மேடையேற்றப்பட்டது.

தற்போது 2026ஆம் ஆண்டு ஆறாவது தடவையாக மேடையேற்றப்படுகின்றது.

‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம், ‘மனிதம்’ என்ற தேடலுக்கு பதில் தரும் வகையில் அமைந்துள்ள இயேசுவின் வாழ்வில் அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், கட்டத்தையும், சவாலையும் எவ்வாறு அணுகி மனிதத்தின் உச்சமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்கினார் என்பதைக் கூற முனைகின்றது.

இம்முறை இதற்கான நெறியாள்கையை மன்றத்தின் அரங்கக் கலைஞர்களில் ஒருவரான இரத்தினசிங்கம் ஜெயகாந்தன் மேற்கொண்டுள்ளார்.

வழமை போலவே பிரமாண்டமான அரங்கஅமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப் பின்னணியிலுமாக இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் ‘காவிய நாயகன்’ அரங்கேறத் தயாராகின்றது.

‘காவிய நாயகன்’ அரங்கேற்றத்தை அனைவரும் கலந்துகொண்டு கண்டுகளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply