அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயத்தில் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்டு, அதனை எமது மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தியிருந்தால், இன்று எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்தவரையில் தீர்க்கப்பட்டிருக்கும் என்பதை தான் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாகவும், எனினும் குறித்த அதிகாரத்தைப் பெற்றவர்களும், அபகரித்துக் கொண்டவர்களும் அதனை ஒழுங்குற செயற்படுத்தியிருக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரினது தன்னிச்சையான போக்கானது கடந்த காலங்களில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு கேள்வியைத் தோற்றுவித்திருந்தது எனவும் சுட்டிக் காட்டினார்.

இதன்போது, 20 ஆவது திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களது ஆணையை மதித்து இந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலத்தில் குறைபாடுகள், அல்லது சேர்க்கைகள் இருப்பின் அதுகுறித்து ஆராய்ந்து அவற்றை சரி செய்து கொள்வதற்கு கால அவகாசம் இருக்கின்றது என்பதால், இது குறித்து எவரும் வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir