பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு!!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவும் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் சமூகம் அளிக்காத காரணத்தினாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்திற்கு சந்திகாந்தன் உட்பட ஆறு பேரும் அழைத்துவரப்பட்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, எதிர்வரும் ‘நவம்பர் 2ம் , 10ம்,16ம் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir