பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்ததுடன் 2633 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஒன்றில் தொலைபேசியூடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார்.
அதன் போது அவர் தெரிவித்திருப்பதாவது,
நிலைமை மோசமடைகின்றது இதன் காரணமாக நான் உங்களிற்கு நிலைமை எவ்வளவு பாரதூரமானது என்பதை தெரிவிக்கின்றேன் நீங்கள் அதனை செவிமடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பிலிப்பைன்சில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் நிலையில் பொலிஸாரின் எச்சரிக்கையையும் அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி நீங்கள் நடப்பீர்களானால், நான் உங்களை கொன்று புதைத்துவிடுவேன் என அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் பிரச்சினைகள் உருவானால், மக்கள் உங்களின் உத்தரவுகளை மீறி மோதலில் ஈடுபட்டு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றால் சுட்டுதள்ளுங்கள் என்பதே பொலிஸாருக்கான எனது அறிவிப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிலிப்பைன்சின் தலைமை பொலிஸ் அதிகாரி எவரும் சுட்டுக்கொல்லப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளதுடன் இந்த விடயத்தில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.