“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகம் ஏப்ரல் 8 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சமூகப் பொறுப்பாண்மை மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளில் அண்மைக் காலமாக ஈடுபட்டு வருகின்றது.
பல்கலைக் கழகத்தின் பால் நிலைச் சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையமானது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்தச் செயற்றிட்டங்களினால் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் ஜீவனோபாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதே போலவே, பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மையின் ஓர் அம்சமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான நூலகமொன்றை ஒழுங்கமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அம்முயற்சியின் முதல்படியாக ஏறத்தாழ 2500 புத்தகங்களைக் கொண்ட நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்படவுள்ளது.
மனிதன் தவறு செய்வது இயற்கை. அவன் திருந்தி வாழ்வதற்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்விக் கூடம்தான் சிறைச்சாலை. தவறு செய்யும் ஒருவன் சிறை வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டால் அவன் மறுபடியும் சமுதாயத்தில் இணைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தைச் சமூகம் அவனுக்கு வழங்க வேண்டும்.
இதன் அடிப்படையில் சிறைச்சாலையில் வாழும் கைதி ஒருவர் தனக்கு தேவையான தகவல் வளங்களை அணுகுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். அதுமட்டுமன்றி, ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகத் தகவல் அறியும் உரிமையும் அமைகிறது. இந்த நோக்குகையே நூலகமொன்றின் தேவையை சிறைச்சாலைக்குள் உருவாக்கியுள்ளது.
கைதிகளின் தண்டனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களின் கல்வி, புனர்வாழ்வு மற்றும் தண்டனைக் காலத்தைப் பயனுள்ள முறையில் செலவிடுதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் வலியுறுத்துகின்றது. இச்சூழலமைவு சிறைச்சாலையின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட சிறைச்சாலை நூலகமொன்றின் உருவாக்கத்திற்கு வழிசமைக்கின்றது.
சிறைச்சாலையில் நூலகம் ஒன்றை உருவாக்கும்போது கல்வி, பொழுதுபோக்கு மற்றும் புனர்வாழ்வு செயற்திட்டங்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்படுதல் வேண்டும். சிறை வாழ்க்கையில் பொருத்தமான தீர்மானங்களைத் தாமே எடுப்பதற்கும், தமக்கு தேவையான தகவல்களை தாமாகவே தேடிச் சென்று பெற்றுக்கொள்ளுவதற்கும் உதவும் வகையில் சிறைச்சாலை நூலகங்களின் சேவைகள் வடிவமைக்கப்பட வேண்டும். அத்துடன் பல்லின சமூதாயமொன்றின் தகவல் தேவையையும், இரசனைகளையும் கவனத்தில் கொண்டு நூல்களின் சேர்க்கை அமைய வேண்டும்.
சிறைச்சாலை நூலகத்தில் நூற்சேர்க்கை என்பது அவர்களின் தகவல் தேவையை நிறைவு செய்யும் வளச்சேர்க்கை என்பதற்கு மேலாக அவை சிறைச்சாலையில் வாழும் கைதிகளை வெளிச்சமூகத்துடன் இணைப்பதற்கான இணைவுப் பாலம் என்பதனையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
சிறைச்சாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட நூலகமொன்று செயற்படும்போது அது பல காத்திரமான விளைவுகளை சிறைச்சாலைச் சமூகத்தில் உருவாக்கும். கைதிகளின் வாசிப்பின் மீதான ஈடுபாடு குற்றச்செயல்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டைக் குறைக்கின்றது என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தமது நேரத்தை பொருத்தமான வகையில் முகாமை செய்வதற்கும் தமது உள ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பேணுவதற்கும் வாசிப்பின் மீதான ஈடுபாடு உதவுகின்றது.
இலங்கையில் சிறைச்சாலை நூலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடனேயே இயங்குகின்றன. அவை பெரும்பாலும் நூலக நியமங்களுக்கேற்ப ஒழுங்கமைக்கப்படுவதில்லை. நன்கொடை மூலம் கிடைக்கும் நூல்கள் மற்றும் தளபாடங்களைக் கொண்டவையாகவே அவை காணப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில் முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பம், ஐ.பி.சி தமிழ் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினர் இந்தச் சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும் பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளது.